Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுத்திகரிப்பு வளாகத்திற்குள் புகுந்து கேரட்கள் தின்ற காட்டுமாடு

ஊட்டி, ஜூலை 23: ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் இயங்கி வரும் கேரட் சுத்திகரிப்பு இயந்திர வளாகத்திற்குள் திடீரென புகுந்த காட்டுமாடு ஒன்று, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கேரட்களை தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. இதில் கேரட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்யும் கேரட்களை கழுவி, தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பும் பல சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. கேரட் சுத்திகரிப்பு பணிக்காக நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வந்துள்ளனர். அப்போது அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுமாடு ஒன்று, சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்குள் நுழைந்தது.

அங்கு முந்தைய நாள் அப்புறப்படுத்தப்பட்ட கேரட்கள் ஒரு டிராக்டரில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த காட்டுமாடு அந்த டிராக்டர் மீது ஏறி கேரட்களை ருசித்து தின்ன தொடங்கியது வெகுநேரம் வளாகத்திற்குள்ளேயே உலா வந்த காட்டுமாடு, தனக்கு தேவையான அளவு கேரட்களை தின்று முடித்த பின்னரே நிதானமாக அங்கிருந்து மீண்டும் வனப்பகுதியை நோக்கிச் சென்றது. இதனால் கேரட் தூய்ைம செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனை தொழிலாளர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. தற்போது பணிபுரியும் வளாகத்திற்குள்ளேயே வரத் தொடங்கியுள்ளதால், நாங்கள் அன்றாட வேலைகளைச் செய்யவே பயமாக உள்ளது என அந்த பகுதி தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர். கேத்தி பாலாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சுற்றித்திரியும் காட்டுமாடுகளை கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.