Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணியில் குன்னூர் வர்த்தகர்களை பின்தொடரும் நெருக்கடி

குன்னூர், ஆக. 21: குன்னூரில் தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணியில் வர்த்தகர்களை நெருக்கடி பின்ெதாடர்கிறது. தற்காலிக கடைகள் அமைக்க அபாயகரமற்ற இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றான குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், கடந்த 2023ம் ஆண்டு புதிய கடைகள் கட்டும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது. அது முதல் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சுமார் 800க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட இந்த பாரம்பரியச் சந்தையைப் புனரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது. அந்த முடிவை எதிர்த்து, வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரைச் சென்று முறையிட்டனர். இருப்பினும், நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கட்டுமானப் பணிகளை தொடங்க உத்தரவிட்டன.

இதையடுத்து அடுத்தகட்ட பணிகள் தொடங்கின. வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஆரம்பத்தில் உழவர் சந்தைப் பகுதியில் நகராட்சி சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த பகுதி வியாபாரத்திற்கு சாதகமாக இல்லை என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்தனர். இதனிடையே, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பிறகும் இந்த திட்டப்பணிகள் தொடரப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதற்கட்டமாக மார்க்கெட் கடைகளை இடிக்கும் பணிகள் தொடங்கின.

கட்டுமானப் பொருட்களை எளிதாக உள்ளே கொண்டு செல்ல ஏதுவாக, மீதமுள்ள கடைகளையும் உடனடியாக இடிக்க வேண்டும் எனக் கூறி நகராட்சி நிர்வாகம் மீண்டும் நோட்டீஸ் வழங்கியது. இதற்குப் பதிலளித்த வியாபாரிகள், ‘‘மீதமுள்ள கடைகளையும் இடித்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும். எனவே, நகராட்சி உடனடியாகத் தகுந்த மாற்று இடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என உறுதியாகக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, நகருக்குள் கிடைக்கும் சிறிய இடங்களைப் பயன்படுத்தித் தற்காலிகக் கடைகளை அமைக்கும் முடிவை நகராட்சி நிர்வாகம் கையில் எடுத்தது. அதனடிப்படையில், தற்போது வி.பி. தெரு மற்றும் குன்னூர் பேருந்து நிலையத்தின் மேல் பகுதி ஆகிய இடங்களில் அவசர அவசரமாகத் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நகராட்சியின் இந்தத் தற்காலிக ஏற்பாடுகள் நகருக்குள் புதிய சர்ச்சைகளையும், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளன. வி.பி. தெருவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் முன்பு ‘பிக்கப்’ வாகனங்கள் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், மிகவும் பழமை வாய்ந்த குன்னூர் பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் 25க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தின் மேல் தளத்தில் கடைகள் அமைக்கப்படுவது சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. ஏனென்றால், ஏற்கனவே அந்த கட்டிடம் பலவீனமாகக் காணப்படுகிறது. அதன் மீது புதிய கடைகள் கட்டப்படும்போது கட்டிடம் எடையை தாங்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அடர்ந்த புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் பாம்புகள், கீரிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால் அங்கு கடைகள் அமைக்கப்பட்டால் வன விலங்குகளால் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத இத்தகைய ஆபத்தான சூழலில் தற்காலிக கடைகளை அமைப்பது வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நகர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வியாபாரிகளையும், போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களையும் ஒரே நேரத்தில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நகராட்சியின் இந்த நடவடிக்கை குன்னூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அபாயகரமற்ற மாற்று இடங்களை விரைந்து கண்டறிந்து கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.