Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோத்தகிரி நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை வருமா? சாலையோர கடைகள், வாகனங்களால் நடைபாதையில் செல்ல முடியாமல் மக்கள் அவதி

கோத்தகிரி,ஆக.19: கோத்தகிரி நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், சாலையோரங்களில் கடை அமைக்க உரிமம் வழங்கும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். பொதுப் பாதைகள், சாலைகள், தெருக்கள், பாதைகள், நடைபாதைகள் எந்த நோக்கத்துக்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மாத இறுதியில் நீலகிரி மாவட்ட கலெக்டரும் நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கோத்தகிரி பகுதியிலும் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரி நகர் பகுதி என்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 250 குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாகும். இங்கு அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு கருவூலம், நகராட்சி மார்க்கெட், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தொழிலாளிகள் கோத்தகிரிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் கோத்தகிரி நகர பகுதியில் உரிய வாகன நிறுத்துமிடம் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் நடைபாதை பகுதியிலும், நடைபாதைகளிலும் வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் காமராஜர் சதுக்கம் செல்லும் சாலையோர நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில் உயர் அதிகாரிகள் அடிக்கடி சென்று வரும் சாலையில் உள்ள மார்க்கெட் நுழைவாயில் அருகே சாலையில் வாகனங்களை நிறுத்தி மீன், காய்கறிகளை இறக்கி, பெட்டிகளை நடைபாதையில் வைக்கிறார்கள். மேலும் மார்க்கெட் உள்ளே கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை நடைபாதையில் காய்வதற்காக போடுகிறார்கள். இவ்வாறு நுழைவாயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், தட்டு முட்டு சாமான்களை வியாபாரிகள் வைப்பதால் அந்த பகுதி ஆக்ரமிப்புக்குள்ளாகிறது.

இதன் காரணமாக அங்குள்ள 16 அடி அகல நடைபாதை சுருங்கி தற்போது 6 அடி மட்டுமே உள்ளது. இதேபோல மார்க்கெட் உள்புறம் கடை வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு வெளியே காய்கறிகளை நடைபாதையில் இடையூறாக வைக்கிறார்கள். இதனால் நடக்க முடியாததால் மார்க்கெட்டிற்குள் வருவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். எனவே கோத்தகிரி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.