ஊட்டி, ஆக. 19: மழை குறைந்ததால் நீலகிரி மலைப்பகுதிகளில் புற்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த சமயங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், தொட்டிகளில் தண்ணீர் அதிகமாக காணப்படும். அதேபோல், நீர் நிலைகளில் தண்ணீர் காணப்படும். அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பும். அனைத்து மலைகளிலும் உள்ள புற்கள் பச்சைப்பசேல் என காட்சி அளிக்கும்.
ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாமல் போக்கு காட்டி வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் இந்த மழையும் தொடர்வதில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீரோடைகள், அணைகள் மற்றும் குளங்கள் ஆகியவை வற்றி விட்டன. பெரும்பாலான பகுதிகளில் உள்ள மலைகளில் பூக்கள் காய்ந்து காணப்படுகிறது.
கோடை காலம் போல் வறட்சி ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த மலைப்பகுதிகளில் உள்ள புற்கள் மட்டுமின்றி செடி, கொடிகளும் தற்போது காய்ந்துவிட்டன. இதனால் எப்போது வேண்டுமானாலும் காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதங்களில் பச்சைப்பசேல் என அனைத்து மலைகளும் காட்சியளிக்கும். ஆனால் இந்த ஆண்டு காய்ந்து போய் காட்சியளிக்கிறது. எனவே காட்டுத்தீ அச்சத்தில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.



