ஊட்டி, ஆக. 19: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக நடந்த டாஸ்மாக் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் ஆனாது. நேற்று கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்கள் வாங்க மது பிரியர்கள் அலைமோதினர். நீலகிரி மாவட்டத்தில் 44 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த அனைத்து பணியாளர்களும் கடந்த 14ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய திட்டங்களை அமலாக்கும் முன் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதுடன், கடைகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்த வேண்டும். காலி பாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.
கடை விற்பனை முடியும் இரவு 10 மணிக்கு மேல் கணக்குகளை சரி பார்க்க இரவு 11.30 மணிக்கு மேல் ஆகிறது. இரவு 8.30 மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பொது போக்குவரத்து வசதி இல்லாததால் வனவிலங்குகள் தொல்லைக்கு நடுவே வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே பணி நேரத்தை இரவு 8 மணி வரை குறைத்து தர வேண்டும். பணி சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும். பயோ மெட்ரிக் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுபிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போன்ற போன்ற பகுதிகளுக்கு சென்று மது வகைகளை வாங்கி வந்தனர். டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் நேற்று காலை டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊழியர்களின் சில கோரிக்கைளை டாஸ்மாக் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து நேற்று வழக்கமான நேரத்தில் அதாவது பிற்பகல் 12 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. கடந்த 4 நாட்களாக மது கிடைக்காமல் தவித்த மது பிரியர்கள் கடைகள் திறக்கப்பட்டதும் கடைகளில் குவிந்தனர். இதன் காரணமாக அனைத்து மதுபான கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.



