குன்னூர், ஆக.14: நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது. இங்குள்ள இயற்கை எழிலைக்காண பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசன் காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடை சீசன் காலம் மட்டுமன்றி, சாதாரண அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுக்கின்றனர். இதனால், விடுமுறை நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதோடு, சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதியின்றி பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே நாளை சுதந்திர தின விழா என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோடை சீசனைப் போலவே, தொடர் அரசு விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏதுவாக, முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு மற்றும் சுற்றுவட்டார சுற்றுலா பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



