Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கல்லாறு சோதனைச் சாவடியில் இ-பாஸ் முறையாக தணிக்கை செய்யப்படுகிறதா? கலெக்டர் திடீர் ஆய்வு

ஊட்டி,ஆக.14: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. இது போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும்போது அனைத்து சாலைகளிலும் வாகனம் நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு இந்த இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தது. இதன் பின்னர் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் முறையாக இ-பாஸ் நடைமுறையை பரிசோதனை செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சபனை, கெத்தை, மேல் கூடலூர் மற்றும் மசினகுடி ஆகிய ஐந்து சோதனை சாவடிகளில் இ பாஸ் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இது முறையாக நடந்து வருகிறதா? என்பது குறித்து அவ்வப்போது கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், சோதனை சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் முறையாக தணிக்கை செய்த பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறார்.

மேலும், நாள் ஒன்றுக்கு 6,000 சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், இந்த இ பாஸ் நடைமுறை முறையாக தணிக்கை செய்யப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி - கோவை மாவட்ட எல்லையில் உள்ள கல்லாறு சோதனை சாவடியில் நேற்று முன்தினம் மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் முறையாக தணிக்கை செய்வது குறித்து நேரில் பார்வையிட்டார். மேலும், முறையாக தணிக்கை செய்த பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, எஸ்.பி பிருந்தா, மாவட்ட வன அலுவலர் கஷாப்சாங் ரவி, கூடுதல் கலெக்டர் அபிலஷா கௌர் ஆகியோர் உடனிருந்தனர்.