ஊட்டி,ஆக.14: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் இடைநிற்றல் இல்லாத நிலை இலக்குகளை அடைவதற்காக, 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் சிறப்பு கணக்கெடுப்பு பணி கடந்த 3ம் தேதி முதல் துவங்கியது. 2026-27ம் கல்வியாண்டில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பில் யாரெல்லாம் கணக்கெடுக்கப்படுவார்கள் என்றால் தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வராத குழந்தைகள், இதுவரை பள்ளியிலேயே சேராத குழந்தைகள், 8ம் வகுப்பு வரை தொடக்க கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்கள், ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள். இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், வறுமை மற்றும் கட்டாயத்தின் பேரில் வேலைக்கு அனுப்பப்படும் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆகியோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தி அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தேயிலைத்தோட்டங்கள், குடிசை பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இந்த ஆய்வு தீவிரமாக நடைபெறும். இக்கணக்கெடுப்புப் பணியில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் இணைந்து குழுக்களாக வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்வார்கள்.
மேலும், தொழிலாளர் துறை, சமூக பாதுகாப்பு,தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம், சல்டு ைலன், அலுவலர் மற்றும் காவல் துறையுடன் முறையாக இணைந்து நடத்தப்படும்.கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் உடனடியாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அருகிலுள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகள் இணைப்பு மையங்களில் சேர்க்கப்படுவார்கள். நமது நீலகிரி மாவட்டத்தில் ஒரு குழந்தை கூட பள்ளிக்கு செல்லவில்லை என்ற நிலை இருக்க கூடாது. எனவே, பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் யாரேனும் இருந்தால், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 0423-2966034 மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 97888 59009 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



