ஊட்டி, ஆக. 12: ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊட்டியில் உள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் போதை பொருட்கள் தமிழ்நாடு உறுதிமொழியினை அரசு மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, போதை பொருட்கள் பயன்பாட்டினை குறைத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேர்வு செய்யப்பட்ட போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களான முதல் பரிசு பெற்ற புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிக்கு ரூ.15 ஆயிரம், 2ம் பரிசு பெற்ற பிதர்காடு அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3ம் பரிசு பெற்ற ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.5000 ஊக்கத் தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பிருந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், ஆர்டிஒ., டினு அரவிந்த், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜசேகர், உதவி ஆணையர் (கலால்) மாதேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, இருப்பிட மருத்துவர் ரவிசங்கர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், தனியார் துறை நிறுவனங்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.



