மஞ்சூர், ஆக.12: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் வறட்சி, மழையின்மை காரணமாக உள்ள அணைகள் மற்றும் ஆறுகளுக்கான நீர் வரத்து குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுறங்களில் கெத்தை, கிண்ணக்கொரை,அவலாஞ்சி,அப்பர்பவானி, தாய்சோலை பகுதிகளில் அடர்ந்த காப்பு காடுகள் உள்ளது. இந்த காடுகளில் பலவகையிலான மரங்கள், தாவரங்கள், மூலிகைகள், செடி, கொடிகள் உள்ளது. மேலும் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான்கள், காட்டு மாடுகள், செந்நாய்கள், கருங்குரங்குகள், முள்ளம் பன்றிகள் போன்ற வனவிலங்குகள், பறவைகளின் வாழ்விடமாகவும் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகளின் இடையே அருவிகள், சிற்றாறுகள், குட்டைகள் உள்ளதால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, இரைகளுடன் குடிநீரும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை அடியோடு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
மழையின்மை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு இணையாக வெயிலின் தாக்கத்தல் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆறுகள், சிற்றோடைகளில் நீர் வரத்து சரிந்துள்ளது. பெரும்பள்ளம், முள்ளி, தொட்டஹள்ளா, பிகுளி உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் பெருமளவு குறைந்துள்ளது. ஒரு சில சிற்றாறுகளும் வறண்டு காணப்படுகிறது. மேலும் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அணைகளிலும் நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யாமல் வறட்சி நீடிக்கும் பட்சத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.



