குன்னூர், அக். 30: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் காலனி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக, பள்ளி வளாகத்தில் இருந்த நடைபாதை திடீரென சரிந்து அடித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த நடைபாதையைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், நடைபாதை இடிந்த பகுதியால் பள்ளி கட்டிடத்தின் அடித்தளமும் பலமிழந்து இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இங்கு பயின்று வரும் 24 மாணவ-மாணவிகளும் பர்லியார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு மேல் தளத்தில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பருவமழை மேலும் தீவிரமடைந்து பள்ளி கட்டிடம் முழுமையாகச் சேதமடைவதற்குள், உடனடியாக நடைபாதையைச் சீரமைத்து, பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


