குன்னூர், அக். 30: குன்னூரில் காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை இருமடங்கு உயர்வு: மக்கள் கடும் அவதி நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக குன்னூர் சந்தை பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இருமடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து முடங்கியுள்ளதால், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் கோத்தகிரியைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் கூடுதல் தூரம் பயணித்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் போக்குவரத்து செலவு காரணமாக குன்னூர் மார்க்கெட்டில் காய்கறி மற்றும் பிற பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வெள்ளைப்பூண்டு: கிலோ ரூ.250, முள்ளங்கி கிலோ ரூ.90, தக்காளி ரூ.கிலோ ரூ.45, ஒரு முட்டை ரூ.7.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை விரைவாக அகற்றி, போக்குவரத்தை உடனடியாகத் தொடங்குவதே விலை குறைய ஒரே வழி என்றும், அதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


