கோத்தகிரியில் காட்டுமாடு உலா
கோத்தகிரி,நவ.15: கோத்தகிரியில் வயது முதிர்ந்த காட்டு மாடு பகல் நேரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்ட பகுதியில் சர்வசாதாரணமாக உலா வரத்தொடங்கி உள்ளது.
அவ்வாறு உலா வருவதால் சாலையில் பயணிக்கக்கூடிய பாதசாரிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் வாகனங்களை இயக்கி செல்கின்றனர். மேலும் தேயிலை தோட்டங்களில் எவ்வித அச்சமின்றி கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உலா வருவதால் தேயிலை தோட்டங்களில் பணிக்கு செல்லவும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சில நேரங்களில் பொதுமக்களை துரத்துவது, தாக்குவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
குறிப்பாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமராஜர் சதுக்கம் முதல் டானிங்டன் பகுதியில் வயது முதிர்ந்த ஒற்றை காட்டுமாடு உலா வரத்தொடங்கி உள்ளது. எனவே காட்டுமாடு நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.