ஊட்டி சுற்று வட்டாரத்தில் பனி மூட்டத்துடன் சாரல் மழை: குளிரால் மக்கள் அவதி
ஊட்டி, நவ.15: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகள் கொட்டிய கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுதல், மண் சரிவுகள் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. இந்த சூழலில் மழை குறைந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிர் நிலவி வந்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல ேமலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்திலும் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, சிறிது இடைவெளிக்கு பின் மாலையில் இருந்து பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.
எதிரில் வரக்கூடிய வாகனங்களே தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக, குன்னூர்-மஞ்சூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட மலைப்பாதைகளில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக பயணித்தனர்.
பனிமூட்டத்துடன் சில நேரம் சில சமயம் இரவில் நல்ல மழை பொழிவு இருந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை ஊட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டமான காலநிலை நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவியது. அதிகாலைகளில் வேலைக்குச் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். நேற்று பகலில் ஊட்டியில் மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மதியத்திற்கு பின் இதமான காலநிலை நிலவியதால் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது.