தொடர் மழையால் குறுமிளகு விவசாயம் பாதிப்பு
பந்தலூர், நவ.12: பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதியில் தொடர்மழையால் குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் தேயிலை, காப்பி செடிகளுக்கு இடையே சில்வர்வொக், பலா மரங்கள் மற்றும் காட்டு மரங்களில் குறுமிளகு கொடிகள் ஊடு பயிர்களாக வளக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.
மருத்துவ குணம் கொண்ட குறுமிளகு சமையல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பயன்படுகின்றது. கறிமுண்டா, வயநாடன், பன்னீயூர் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை பருவம் தவறி பெய்ததால் குறுமிளகு செடிகள் காய்ந்தும், வாடல் நோய் உள்ளிட்ட நோய் தாக்கம் காரணமாக மகசூல் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி குறுமிளகு விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி குறுமிளகு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.