ஊட்டியில் கடும் மேக மூட்டம் சாரல் மழையால் குளிர்
ஊட்டி, நவ. 12: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனியின் தாக்கம் இருக்கும். இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வது வழக்கம்.
ஆனால், பகல் நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும். மீண்டும் மாலையில் பனி மூட்டம் காணப்படம். இது போன்ற சமயங்களில் கடும் குளிர் நிலவும். இம்முறை கடந்த மூன்று மாதங்களாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சில நாட்கள் மழை குறைந்து நீர் பனி காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக பகலில் வெயில் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டது.
நேற்று ஊட்டியில் பகலிலேயே கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்டது. மேலும், புற நகர் பகுதிகளிலும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால், ஊட்டியில் கடும் குளிர் நிலவியது. குளிரால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள். இந்த மாறுபட்ட காலநிலையால், பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாய பயிர்களும் பாதித்துள்ளன.