ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு தேயிலை தூள் விற்க வலியுறுத்தல்
ஊட்டி, நவ. 12: கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயந்தி, இணை செயலாளர்கள் வினோபா பாப், கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு மற்றும் தரமான டேன்டீ தேயிலை தூள் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் தினமும் காலையில் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள சாலையோர சிற்றுண்டி கடைகள் மற்றும் பலகாரம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும். கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் செயல்படாத ஏடிஎம்-யை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சங்கத்தின் ஒரு நாள் பயிற்சி முகாம் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.