குன்னூர்,செப்.11:நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமன்னா பூங்கா பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பின்றி இடிக்கப்பட்ட கட்டிடத்தின் உரிமம் தொடர்பாக இருந்து வந்த நீண்ட நாள் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு உரியதா? அல்லது நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமானதா? என்ற எல்லைச் சர்ச்சை நிலவி வந்த நிலையில், ஆய்வுகளுக்குப் பிறகு அக்கட்டிடம் நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்ட இடத்தில் கழிப்பிடத்தைச் சீரமைத்து புதிய கட்டமைப்பு எழுப்பும் பணிகள் வேகமெடுத்துள்ளன.


