குன்னூர், செப்.9: குன்னூர் அரசு மருத்துவமனையில் பதுங்கிய நச்சுப்பாம்பை கண்டு மருத்துவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் உள்நோயாளியாகவும் வெளிநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை எல்லைகளாகக் கொண்ட இந்த மருத்துவமனை வளாகத்தில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று, மருத்துவமனை தலைமை மருத்துவரின் அறைக்குள் புகுந்துள்ளது.
அறையில் இருந்த மேஜைக்கு அடியில் பாம்பு பதுங்கியிருப்பதை எதிர்பாராமல் கண்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். தகவல் அறிந்து வந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள், பாம்பு உபகரணங்களை பயன்படுத்தி மேஜையின் அடியில் பதுங்கியிருந்த பாம்பை சாதுரியமாகப் பிடித்தனர். அவை வெள்ளிக்கோல் வரையன் வகை பாம்பு என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்புப் படையினர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.


