Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை; காய்கறிகளை பயிர்களை பாதுகாக்க லாரி தண்ணீர் வாங்கும் விவசாயிகள்: நஷ்டம் ஏற்படுவதாக கவலை

ஊட்டி, ஜூலை 31: எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரியில் தெற்மேற்கு பருவமழை ஏமாற்றி வரும் நிலையில், காய்கறி பயிர்களை காப்பாற்ற விவசாய நாளொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்கி பாய்ச்சும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே இறுதியில் இருந்து முதல் ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இந்த இரு பருவமழைகளால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நிரம்பும். குடி தண்ணீர் பிரச்னையும் இருக்காது. விவசாய பணிகளும் தடையின்றி நடைபெறும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இறுதியில் துவங்கியது. சில நாட்கள் மட்டுமே பெய்த நிலையில், எல்-நினோவின் தாக்கம் காரணமாக அதன் பின் மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள்,குடிநீர் ஆதாரமாக உள்ள நீரோடைகள், குளங்கள் போன்றவை வறண்டுள்ளன. இதனால் பல இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. மலை காய்கறி விவசாயத்திற்காக பயன்படும் அனைத்து ஆறுகள், குட்டைகள், நீருற்றுகள் காய்ந்து போய் உள்ளதால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பல விவசாயிகள் மலைப் பாங்கான பகுதிகள் மற்றும் சரிவுகளில் விவசாயம் மேற்கொள்ளாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தாழ்வான பகுதிகளில்கூட போதிய தண்ணீர் இன்றி சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் தங்கள் காய்கறி பயிர்களை காக்கும் வகையில் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். காரபிள்ளு, குளிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் லாரி மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நகருக்கு அருகாமையில் உள்ள விளை நிலங்களுக்கு ஒரு லோடு சிறிய லாரி தண்ணீர் ரூ.3 ஆயிரம் வரையிலும் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. சற்று தொலை தூர கிராமங்களுக்கு சென்றால், அந்த பகுதிக்கு செல்லும் தூரத்திற்கேற்ப அதிகமாகும்.

குறிப்பாக ஒரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட், உருளை போன்ற காய்கறி பயிர்களை விவசாயிகள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீரை ரூ.6 ஆயிரம் வரையிலும், 7000 லிட்டர் தண்ணீரை ரூ.4 ஆயிரம் வரை பணம் கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகின்றனர். ஆனால் ஒரே சமயத்தில் ஏராளமான விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில நேரங்களில் பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலையும் நிலவுகிறது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான தண்ணீர் லாரிகள் உள்ளதால் தண்ணீர் லாரிகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் பலரும் லாரிகளில் தற்காலிகமாக தொட்டிகள் தண்ணீர் லாரியாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அப்படியே தண்ணீர் லாரி கிடைத்தாலும் தண்ணீர் வாங்க காசு இல்லாமல் ஏராளமான விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஏக்கர் கணக்கில் தோட்டம் வைத்துள்ளவர்கள் ஒரு நாளுக்கு மூன்று முதல் 5 லோடு வரை தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சுக்கின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் இம்முறை காய்கறிகளால் கிடைக்கும் வருவாய் தண்ணீர் வாங்கவே சரியாக இருக்கும். லாபம் கிடைக்காது. நஷ்டம்தான் ஏற்படும் என விவசாயிகள் கவலை தொிவிக்கின்றனர். இனிவரும் நாட்கள் கடுமையானதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.