Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடலூர் அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்காத வனத்துறை அச்சத்தில் தவிக்கும் கிராம மக்கள்

கூடலூர், ஜூலை 30: கூடலூர் அருகே உள்ள பாடந்துறையை அடுத்த கணியம்வயல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஒற்றை காட்டு யானை நடமாடி வருகிறது. இரவு நேரங்களிலும், மாலை மற்றும் அதிகாலை நேரத்திலும் இந்த யானை அந்த பகுதியில் உள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் நடமாடுகிறது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக அந்த வழியாக செல்வோர் யானையால் துரத்தப்பட்டு வருகின்றனர். இந்த கிராமப் பகுதிகளுக்குள் சுற்றித்திரியும் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிராமங்களுக்குள் யானை புகும்போது அதனை விரட்டும் வனத்துறையினர் கிராமங்களை ஒட்டியுள்ள அகழியை கடந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதில்லை.

மீண்டும் கிராமப் பகுதிகளுக்குள்ளேயே யானையை விரட்டி வருவதாகவும், இதனால் அந்த யானை கிராம பகுதிகளுக்கு உள்ளேயே சுற்றி வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வனப்பகுதிகளில் இருந்து அகழிகளைக் கடந்து கிராமங்களுக்குள் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அகழியை கடந்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், அகழிகளை சீரமைத்து மின்வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாடந்துறை பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்குள் சுற்றித்திரியும் யானைகள் முழுவதையும் வனப்பகுதிக்குள் விரட்டி அகழி அமைத்து தரப்படும் என பேச்சுவார்த்தைகளின்போது வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் அகழி அமைக்கும் பணிகள் முழுமையடையவில்லை. தற்போது தினமும் யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைவது, சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாதவாறு ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்களை யானைகள் துரத்துவது, சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் தினமும் அச்சத்தில் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக மக்கள் வசிக்கும் கிராமங்களை ஒட்டியுள்ள தனியார் தோட்டங்கள் பராமரிப்பின்றி காடுகளாக மாறி வருகின்றன. அந்த இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதாக கூறி வரும் வனத்துறையினர் இதுநாள் வரையிலும் அதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது பாடந்துறை, தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் வன எல்லையை ஒட்டிய கிராமங்களில் மட்டுமின்றி, உள்பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதிகளைவிட்டு வெளியேறி கிராமப் பகுதிகளை ஒட்டி முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டி வன எல்லையை ஒட்டி முழுமையாக அகழியுடன் கூடிய மின்வேலி அமைத்தால் மட்டுமே யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்து பழகிய ஒரு சில யானைகள் மட்டுமே அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவது என்பது சாத்தியமான ஒன்று. எனவே கிராம மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டால் நிச்சயம் பொதுமக்கள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்’’ என தெரிவித்தனர். மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு யானை நடமாட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.