Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ஊட்டி, ஜூன் 30: பல்வேறு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஊட்டி நகராட்சியில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான கூடை, துடைப்பம், மண் வெட்டி, கத்தி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதில்லை. உடனடியாக அவற்றை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களால் தற்போது பணியில் உள்ள தொழிலாளர்கள் மீது அளவுக்கு மீறிய பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை மற்றும் மரண பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

சிபிஎஸ் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உள்ள 10 பணியாளர்களின் ஓய்வூதிய பலன்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றை உடனடியாக தீர்வு காண வேண்டும். பழுதடைந்துள்ள நகராட்சி வாகனங்களை உடனடியாக பழுது பார்த்து சரி செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினசரி 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதை நிறுத்தி, தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடந்த ஓராண்டாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மற்றும் பிஎப் தொகைகள் செலுத்தப்படாத நிலை உள்ளது. நிலுவைத் தொகைகளை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இதுவரை செலுத்தப்படாமல் உள்ள நிலுவை பிஎப் தொகைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நீலகிரி மாவட்ட சிஐடியு நகராட்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஒ டினு அரவிந்த் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் நகராட்சி ஆணையாளர் நித்யா, நகர் நல அலுவலர் சிபி, டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிர்வாக தரப்பில் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்க தரப்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், நகராட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சேகர், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ரவிகுமார், சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின்அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.