ஊட்டி,ஆக.29: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை இறுதி கலந்தாய்வு நாளைமறுநாள் (31ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் எபினேசர் கூறியிருப்பதாவது: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை இறுதி நாள் நாளைமறுநாள் (31ம் தேதி) என பாரதியார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். tngasa இணையதளத்தில் விண்ணப்பித்த மற்றும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் புதிதாக விண்ணப்பித்து அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை பெற்று பயனடையலாம்.
இளநிலை பாடப்பிவுகளில் சேர சேர்ககையின் போது ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்று சான்றிதழ், ஆன்லைன் சாதி சான்று, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தலா 3 பிரதிகள் எடுத்து வர வேண்டும். மேலும் ஆன்லைன் வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். ஆன்லைன் சாதி சான்று இல்லாத பட்சத்தில் தற்போதுள்ள சான்று, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.3700, இதர பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.4300 சேர்க்கை கட்டணம் ஆகும்.
tngasa portalலில் சேர்க்கையை பதிவேற்றி அதனை உறுதிப்படுத்தி அதன் பிரதியை துறை தலைவரிடம் ஒப்படைத்து துறை சார்ந்த ஆவணத்தில் மாணவரின் அனைத்து விவரங்கள் ஏற்றப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதுகலை மாணவர்கள் இளநிலை பட்டபடிப்பு படித்ததற்கான தொகுப்பு மதிப்பெண் பட்டியல், 6 பருவங்களுக்கான மதிப்பெண் பட்டியல்களின் அசல், மைகிரேசன் சான்று, ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தலா 6 பிரதிகள் எடுத்து வர வேண்டும்.
மேலும் ஆன்லைன் வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.2500, ஏனைய பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.3600 சேர்க்கை கட்டணம் ஆகும்.



