Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் மரபியல் பூங்கா

கூடலூர்,செப்.26: கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் இயங்கி வரும் தாவர மரபியல் பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும்,இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் அவசியம் குறித்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

240 ஹெக்டர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தாவர மரபியல் பூங்கா,ஆரம்ப காலகட்டங்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், தாவர மரபுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஒரு தகவல் மையமாக இயங்கி வந்துள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு மையமாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் இங்கு பெரணி இல்லம்,ஆர்க்கிடோரியம், அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை தாவரங்களின் மரபு

களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் பகுதி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை இயங்கி வந்தன.

தற்போது இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனப்பகுதியில் அந்தரத்தில் சாகச பயணம் செல்லும் ஜிப்லைன்,ட்ரக்கிங் போன்றவை கடந்த சில வருடங்களாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஜிப் லைனில் சாகச பயணம் செல்வதை விரும்புகின்றனர். மேலும் வனப்பகுதியில் ட்ரக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டிகளின் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சோலை காடுகளின் முழு அமைப்பை விவரிக்கும் மினியேச்சர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் இருட்டில் செல்லும் போது மின் மினி பூச்சிகள் மின்னும் வெளிச்சம் மற்றும் பல்வேறு வகையான வண்டுகள் ரீங்காரம் கேட்கும் வகையில் பயரி எனப்படும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கிற்குள் நுழைந்தால் இருள் நேரத்தில் வனப்பகுதியில் நுழைந்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய கம்ப்யூட்டர் தொடுதுறையில் நாம் வண்ணம் கொடுத்து வரையும் வண்ணத்துப்பூச்சிகள் நமக்கு நேர் எதிரில் உள்ள திரையில் அதே வண்ணத்தில் பின்னணி இசையுடன் பறப்பதை காண முடியும். இவை அனைத்தும் பூங்காவின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டு உள்ளன. பூங்கா நுழைவு வாயில் இருந்து இப்பகுதிக்கு செல்லும் வழியில் அடர்ந்த மரக்காடுகள் இடையே செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச உணர்வு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு தங்கி செல்வதற்கு தேவையான விடுதிகளும் உள்ளன.