Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்ரீமதுரை ஊராட்சியில் சிறுத்தை தாக்கி பசுமாடு, ஆடு பலி

கூடலூர்,ஆக.26: ஸ்ரீ மதுரை ஊராட்சியில் சிறுத்தை தாக்கி பசுமாடு, ஆடு பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி சேமுண்டி வயல் பகுதியில் வசிப்பவர் விவசாயி பிரமோத். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பசுமாட்டை மேய்ச்சலில் ஈடுபடுத்தி இரவு வீட்டின் அருகில் கட்டி வைத்துள்ளனர். நேற்று அதிகாலை பசுமாட்டை ஒன்று சிறுத்தை தாக்கி கொன்றது. பின்னர் அதன் பின்புற பகுதியில் இறைச்சியை சாப்பிட்டு சென்றுள்ளது. காலையில் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது பசுமாடு இறந்து கிடப்பதை விவசாயி பார்த்துள்ளார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதே போல் விமலகிரி பகுதியில் சுசிலா என்பவரது ஆடு ஒன்றும் வன விலங்கு தாக்கி பலியானது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல், விமலகிரி பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் புலி ஒன்று நடமாடியதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இறந்த பசுமாடு மற்றும் ஆட்டை தாக்கியது சம்பந்தப்பட்ட புலியாக இருக்கலாம் என்றும், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வளர்ப்பு கால்நடைகளையும், விலங்குகளையும் சிறுத்தை ஒன்று தாக்கி வருவது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், காலடி தடயங்களை வைத்து கால்நடைகளை வேட்டையாடியது சிறுத்தை என தெரிவித்துள்ளனர். இதே போல் தேவர் சோலை, பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளிலும் நடமாடும் புலி ஒன்று அவ்வப்போது கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. கடந்த சில நாட்களுக்குள் ஓவேலி பேரூராட்சி லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் பேரை வேட்டையாடி உள்ளது.

இந்த புலி மனிதர்களை வேட்டையாடும் புலியாக மாறியதால் அதனை கூண்டு வைத்தும், மயக்க ஊசி போட்டும் பிடிக்கும் நடவடிக்கைகளில் 5வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புலியை கண்காணிக்க மேலும் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தேவர் சோலை மற்றும் ஸ்ரீ மதுரை சுற்றுவட்ட பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடும் புலிகள் வனப்பகுதியில் உள்ள தங்களது வாழ்விடங்களை இழந்து வெளியேறிய புலிகளாக இருக்கலாம் என்றும், கிராமங்களை ஒட்டி நடமாடி கால்நடைகளை வேட்டையாடும் புலிகள் மனிதர்களையும் வேட்டையாட வாய்ப்புகள் உள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் அப்பகுதிகளில் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு மிகுந்த அச்சத்துடனே நடமாட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட 2 புலிகளும் வயதானவையா, அல்லது உடல் ஊனமுற்றவையா என்பதை வனத்துறையினர் கண்காணித்து அவற்றை மயக்க ஊசி போட்டுப் பிடித்து காப்பகங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலை நம்பியே உள்ளனர். தேயிலை, காபி, மிளகு, காய்கறி போன்றவற்றை பயிரிட்டு வாழ்க்கை நடத்தும் இவர்கள் வனவிலங்குகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாக்கி உள்ளது. காட்டு யானைகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு வரும் நிலையில், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் கால்நடைகளும் அடிக்கடி பலியாகி வருகின்றன.

இதில் பெரும்பாலான விவசாய பயிர்களுக்கு இழப்பீடு கிடைப்பது இல்லை. கால்நடைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடும் போதுமானதாக இல்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.