கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம்: பொதுமக்கள் இரவில் நடமாட தடை ; வனத்துறை எச்சரிக்கை
கூடலூர்,ஆக.28: கூடலூர் அருகே மீண்டும் தேயிலைத் தோட்டத்தில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரவில் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. புத்தூர் வயல்,விமலகிரி,அத்திப்பாளி சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தேயிலை தோட்டங்களில் புலி ஒன்று நடமாடி வருகிறது. பகல் நேரத்திலும் புலியின் நடமாட்டம் காரணமாக அப்பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த இரு தினங்களில் மூன்று மாடுகள் புலியால் வேட்டடையாடப்பட்டுள்ளன.புலி தாக்கி மாடுகள் இறந்துள்ளதாலும்,அடிக்கடி புலி தேயிலைத் தோட்டங்களில் பகல் நேரத்தில் நடமாடுவதாலும், ஓவேலி பேரூராட்சி லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் புலி தாக்கி இரண்டு விவசாயிகள் பலியாகி உள்ளதாலும் இப்பகுதி பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அத்திப்பாளி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் அரசு பள்ளி வளாகத்தை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் புலி ஒன்று நடமாடி உள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் புலியின் கால் தடயங்களை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் புதர்பகுதிகள் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், காலை,மாலை வேளைளில் தனியாக நடமாடுவதையோ,தேயிலை தோட்டங்களில் தனியாக வேலை செய்வதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் புத்தூர் வயல் சாலை சமாரிட்டன் மருத்துவமனையை ஒட்டிய பகுதியில் பசு மாட்டை புலி தாக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியது போல் தேயிலை தோட்டங்களிலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தூர் வயல், அத்திப்பாளி மற்றும் விலகிரி பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் புலி ஒரே புலியா அல்லது வேறு வேறு புலிகளா என்பது குறித்தும், வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டங்கள் குடியிருப்புகளை ஒட்டி நடமாடி கால்நடைகளை தாக்கும் புலி மனிதர்களை தாக்கினால் மேலும் ஆபத்தான சூழல் உருவாகும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடித்து காப்பகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பணிகளை விரைவாக செய்த பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7வது நாளான நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பகுதிகளில் மொத்தம் 130 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனியிலிருந்து வனச்சரக அலுவலர் ஒருவர் தலைமையிலான வன உயரடுக்கு படையினர் வரவழைக்கப்பட்டு, புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தெய்வமலை,மேட்டூர்,குறிஞ்சி நகர்,முல்லை நகர்,காந்தி நகர் மற்றும் வளப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ட்ரோன் மூலம் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 கூண்டுகளை வைத்துள்ள வனத்துறை
ஆட்கொல்லி புலியை பிடிக்க தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 13 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் ஆடு மற்றும் மாட்டிறைச்சி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலி நடமாட்டம் உள்ள பகுதிகளிலும், பசுக்களை வேட்டையாடிய பகுதிகளிலும், அடர்ந்த புதர் மற்றும் மரங்களிலும் சேர்த்து 130 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
புலியை பிடிக்க வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் புலி தாக்கி கொன்றதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் ஆட்கொல்லி புலி வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் ஆட்கொல்லியை பிடிக்க வலியுறுத்தி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கூடலூர் பகுதியில் மனிதர்களை வேட்டையாடி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்றும் இன்றும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பால நந்தகுமார் கூறுகையில், நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (நேற்று) நடந்தது. இதில், கூடலூர் ஓவேலி பகுதியில் மனிதர்களை தாக்கி ஒன்று வரும் ஆட்கொல்லியைப் பிடிக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்றார். கூட்டத்தில் செயலாளர் முனி ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




