ஊட்டி,ஆக.28:ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டி வட்டம் சோலூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தார். மேலும், அதே பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாக விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சோலூர் கால்நடை மருந்தகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள்,மருந்துகளின் இருப்பு, கால்நடைகளின் வருகை குறித்தும், சோலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பள்ளியின் சமையலறை, இருப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினையும் ஆய்வு செய்தார். சோலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், வங்கியின் செயல்பாடுகள்,பயிர்கடன் குறித்தும், மேலும், சோலூர் கிளை நூலகத்தில் பதிவேடுகள்,புத்தகங்கள் மற்றும் வாசகர்களின் எண்ணிக்கை குறித்தும், நியாய விலைக்கடையில் உணவு பொருட்களின் இருப்பு, தரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும் மற்றும் சோலூர் பேரூராட்சி அலுவலகத்தில், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டட்டி மற்றும் சேலக்கல் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், குழந்தைகளின் வருகை, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ரூ.24.60 லட்சம் மதிப்பில் கோக்கால் பகுதியில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினருக்கான மண்பாண்ட பட்டறையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.



