குன்னூர்,ஆக.26: குன்னூர் அருகே நள்ளிரவில் உலா வந்த கருஞ்சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரா காலனி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அரிதான கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. வீட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கருஞ்சிறுத்தை அமைதியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே அப்பகுதியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், தற்போது கருஞ்சிறுத்தை நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன் வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் கூண்டு வைத்து கருஞ்சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


