ஊட்டி,ஆக.28: ஊட்டியில் 2வது சீசன் அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்கா தொட்டிகளில் தற்போது மலர்கள் பூக்கத் துவங்கிய நிலையில் அதனை சுற்றுலா பயணிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வருகின்றனர். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முதல் சீசனின் போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அது மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். மேலும், மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இரண்டாம் சீசனான செப்டம்பர் மட்டும் அக்டோபர் மாதங்களில் மலர் கண்காட்சி மற்றும் பெரிய அளவிலான மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டு அவைகள் பூத்துக் குலுங்கும். அதேபோல் பூங்காவில் உள்ள மாடங்களில் பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்தவுடன் அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் 2வது சீசனுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
அதேபோல் தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அடுத்த வாரம் இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில் தற்போது பூங்காவில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. தொட்டிகளில் மேரிகோல்டு, சால்வியா, பேன்சி, டேலியா, சைக்ளோமன், டெய்சி போன்ற மலர்கள் தற்போது பூக்க துவங்கியுள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர். அனைத்து தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்துக்கு மேல் மாடங்களில் மலர் தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்லலாம்.



