ஊட்டி,செப்.25: ஊட்டி - கூடலூர் சாலையில் கூட்செட் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் கூட்செட் பகுதியில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று பகலில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த பிரதான குடிநீர் விநியோகக் குழாயின் மீது இயந்திரம் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்குள் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணானது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.உடனடியாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு குழாய் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைத்து மக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


