Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கணவன் வீட்டினர் முன் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையால் பரிதாபம்

திருவனந்தபுரம், மே 25: காசர்கோடு மாவட்டம் வித்யாநகர் அருகே உள்ள செர்லடுக்கா பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகள் பாத்திமுத்து சுபைதா (24). இவருக்கும், அருகிலுள்ள செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதிலுக்கும் (28) கடந்த வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மாதமான ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் ஆதிலும், அவரது வீட்டினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பாத்திமுத்து சுபைதாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இவர்களது சித்தரவதை அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் பாத்திமுத்து சுபைதா தன்னுடைய அண்ணன் அப்துல் வாசிலை போனில் அழைத்து விவரத்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்துல் வாசில் அன்று இரவே தங்கையின் வீட்டுக்கு சென்று கணவன் மற்றும் அவருடைய பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பாத்திமுத்து சுபைதா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.

இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். ஆனால் கணவன் வீட்டினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அப்துல் வாசில் தான் பக்கத்து வீட்டினரின் உதவியுடன் தங்கையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாத்திமுத்து சுபைதா நேற்று அதிகாலை மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வித்யா நகர் போலீசார் ஆதிலை கைது செய்தனர். கணவன் மற்றும் அவருடைய வீட்டினரின் கொடுமை தான் பாத்திமுத்து சுபைதாவின் தற்கொலைக்கு காரணம் என்று அவரது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இன்று பாத்திமுத்து சுபைதா மற்றும் ஆதிலின் முதலாவது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.