Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோத்தகிரி சாலையில் சுற்றித்திரியும் கால் நடைகள்: காற்றில் பறந்த நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை

கோத்தகிரி, ஜூன் 23: கோத்தகிரி நகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தெருக்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் திரிய விடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கால் நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோத்தகிரி நகராட்சி பகுதி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் 250 குக்கிராம மக்கள் தினம்தோறும் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக உள்ளது. கோத்தகிரியில் கோர்ட், தாசில்தார் அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வங்கிகள், மார்கெட் உள்பட பல முக்கிய அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன.

இதனால் கோத்தகிரி பகுதி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்நிலை கடந்த சில மாதங்களாக கோத்தகிரி நகர்பகுதி மட்டுமின்றி கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் கால்நடைகளின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. கால்நடைகள் முக்கிய தெருக்கள், சாலைகளில் சுற்றி திரிவதும், அதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இது மட்டுமின்றி கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம் உள்பட அரசு அலுவலக வளாகங்களில் தொடர்ந்து உலா வருகின்றன. கால்நடைகளின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டி கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை தெருவில் திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என 2 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மேலும் இது குறித்து ஒலிபெருக்கி வாகனம் மூலம் அறிவிப்பு செய்தும், தெருவில் திரிந்த கால்நடைகளை பிடித்து கட்டி எச்சரித்தும் கூட, கால்நடைகளின் உரிமையாளர்கள் அதைக் கண்டுக் கொள்ளாமல் தங்களது கால்நடைகளை தெருக்களில் மீண்டும் திரிய விட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நகராட்சி மார்கெட்டில் மாடுகள் புகுந்து அங்கு விற்பனைக்காக கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே கால்நடைகள் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் கோத்தகிரி பகுதியில் கால்நடைகளை திரிய விடக்கூடாது என கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. மேலும் கால்நடைகளை தெருக்களில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீறி கால்நடைகளை திரிய விட்டால், கால்நடைகளை பிடித்து கோவையில் உள்ள கோ சாலைக்கு கொண்டுச் சென்று விடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தெருக்களில் திரிய விட்ட வண்ணம் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால் நடைகள் தொல்லையை கட்டுப்படுத்தவும், விதிகளை மீறும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.