ஊட்டி, ஆக. 18: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டிற்கு அதிக விலை கிடைப்பதால் தற்போது பூண்டு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அடுத்தப்படியாக மலை காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் பூண்டு ஆகியவை பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு அதிக சுவை உள்ளதால் சமவெளி பகுதிகளில் எப்போதுமே அதிக கிராக்கி உள்ளது. இதில், குறிப்பாக, ஊட்டி மலை பூண்டு விதைகள் மற்றும் நாட்டு மருந்து தயாரிப்பதற்காக அதிக அளவு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், நீலகிரி பூண்டிற்கு எப்போதும் ஒரு சீரான விலை கிடைக்கும். ஆனால், சில சமயங்களில் வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக அளவு வரும்போது விலை குறைவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் விளையும் பூண்டிற்கு அதிக விலை கிடைத்து வருகிறது. கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதனால், ஊட்டி அருகே கொல்லிமலை முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது விவசாயிகள் பூண்டு பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




