Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கேரள மின்வாரிய தலைவராக பொறுப்பேற்பு

திருவனந்தபுரம், ஜூன் 18: கேரள மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி ராஜமாணிக்கம் நேற்று பொறுப்பேற்றார். கேரளத்தில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, வருவாய் துறை செயலாளராக இருந்த எம்.ஜி.ராஜமாணிக்கம் கேரள மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். இந்நிலையில் எம்.ஜி. ராஜமாணிக்கம் நேற்று கேரள மின்வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

2008ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கத்தின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவர் இதற்கு முன்பு கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழக இயக்குனர், வருவாய் துறை செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கேரள அரசின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் இளைஞர் தன்னார்வத் தொண்டில் சிறந்த நடைமுறைக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். மின்வாரிய தலைவர் பொறுப்புடன் மின்சாரம், சுற்றுச்சூழல், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தேவசம் போர்டு செயலாளர் பொறுப்பையும் இவர் வகிக்கிறார்.