ஊட்டி, ஆக. 17: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஊட்டி எச்பிஎப் தொழிற்சாலை வளாகம் வனப்பகுதியாக மாறி வருவதுடன் வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் இந்து நகர் பகுதியில் வனத்துறை நிலம் 320 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று 1960ல் காமராஜர் ஆட்சி காலத்தில் எச்பிஎப் எனப்படும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை துவங்கப்பட்டது.
பல்வேறு கட்டுமான வசதிகளுடன் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடன் தெற்காசியாவின் புகழ்பெற்ற போட்டோ பிலிம் தொழிற்சாலையாக கொடிகட்டி பறந்தது. இங்கு தயாரிக்கப்பட்ட கருப்பு வெள்ளை பிலிம்கள் மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், 1990ல் உலக மயமாக்கல் கொள்கை, தனியார் பிலிம் நிறுவனங்கள் வரத்து, புதிய தொழிற்நுட்பங்கள், வெளி நாட்டு நிறுவனங்கள் வரவு போன்ற காரணங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிலிம்களின் மவுசு குறைய துவங்கியது.



