குன்னூர், ஆக.17 : குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் 80-வது சுதந்திர தின மாரத்தான் போட்டி நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. வெலிங்டன் ராணுவ முகாமில் அமைந்துள்ள தங்கராஜ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை, வெலிங்டன் ராணுவ மையத்தின் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் சுமார் 1200 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக, 121 பெண்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் நினைவுப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.



