Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கூடலூர் அருகே பகல் நேரத்தில் அரசுப்பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது

கூடலூர்,ஜூலை17: ஓவேலி பேரூராட்சி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கழிப்பறையின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 80 மாணவர்கள் படிக்கின்றனர். இதே வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடியில் 30 குழந்தைகள் உள்ளனர். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் ஒரே கட்டிடத்தில் உள்ளன.

கடந்த பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த கழிப்பறை சுவர்கள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. கழிப்பறையை புதுப்பித்து தர பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி துவங்கி நடந்து வந்த வேளையில் காலை சுமார் 10:30 மணியளவில் திடீரென கழிப்பறை கட்டிடச் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் யாரும் அந்த பகுதிக்கு செல்லாததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் உடனடியாக கல்வித்துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு தகவல் அளிக்கவே, சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கழிப்பறையை சீரமைத்து புதுப்பித்து தர உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.