Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நீர்வரத்து இல்லாததால் குளமாக மாறிய ரேலியா அணை குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

குன்னூர்,ஜூலை17: நீர்வரத்து இல்லாததால் ரேலியா அணை குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் விரைவில் குன்னூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிப் பகுதியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தினாலும், நீர்வரத்து இல்லாததாலும் ரேலியா அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. 43.7 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 30 அடியாகக் குறைந்துள்ளது. நீரின்றி தற்போது ஒரு சிறிய குளம் போல சுருங்கிப்போய் காட்சியளிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் நகரில் ஏற்பட்ட கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் கரன்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், நகராட்சியின் குடிநீர் விநியோக வாகனங்கள் பழுதடைந்து உள்ளன. இந்த வாகனங்கள் சரி செய்யப்படாமல் இருப்பதால், பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்குக்கூட சுமார் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆரம்பக் கட்டத்தில் குன்னூர் மக்களின் தாகம் தீர்க்க கொண்டு வரப்பட்ட ‘எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம்’ தற்போதைய சூழலில் முறையான பராமரிப்பு இன்றி முடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினால் தங்களுக்கு தற்போதைய நிலையில் எந்தவொரு பயனும் இல்லை என்று குன்னூர் நகர மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது கோடை வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால்,விரைவில் குன்னூர் நகர்ப் பகுதியில் மிகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி, சீரான குடிநீர் விநியோகம் செய்ய தகுந்த வழி வகைகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.