Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மஞ்சூரில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

மஞ்சூர்,ஜூலை13: நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவின் தலைநகரான மஞ்சூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளது. மஞ்சூரில் தாலுகா அலுவலகம்,அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள், மகளிர் பள்ளி, கூட்டுறவு, தனியார் தேயிலை தொழிற்சாலைகள், வங்கிகள்,அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளது.இதனால் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் மஞ்சூர் நகருக்கே சென்று வர வேண்டியுள்ளது. இதை முன்னிட்டு ஊட்டி, குன்னூர், கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மஞ்சூர் வழியாக கிராமங்களுக்கு ஏராளமான அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மஞ்சூரை சுற்றிலும் அப்பர்பவானி, அவலாஞ்சி,கிண்ணக்கொரை, குந்தா, எமரால்டு, அன்னமலை, பென்ஸ்டாக், மஞ்சகம்பை உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மஞ்சூரில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பேருந்துகளும் பஜாரில் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது.

இதனால் பஜார் பகுதியில் தினசரி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் பஜாரில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து மற்றும் பயணிகள் நலன் கருதி மஞ்சூரில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.