Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் மண் மாதிரி சேகரிப்பு: விழிப்புணர்வு முகாம் இன்று துவக்கம்

ஊட்டி, ஜூலை 13: நீலகிரி மாவட்டத்தில் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்கள் இன்று துவங்குகிறது. ஊட்டி மண் பரிசோதனை நிலைய தோட்டக்கலை உதவி இயக்குநர் அனிதா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு போன்ற காய்கறி பயிர்களும், தேயிலை, காபி போன்ற தோட்ட பயிர்களும், பல்வேறு வகை பழ பயிர்களும் பயிரிடப்படுகின்றன. மண் வளத்தை பாதுகாக்க, அதிக மகசூல் பெற மண் பரிசோதனை மேற்கொண்டு சமச்சீர் உரமிடுவது அவசியம். மண் ஆய்வு செய்யப்பட்டு மண்ணில் உள்ள கால அமில நிலை, அங்கக கரிம சதவீதம், பேரூட்ட சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் அளவும், அடுத்த பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளும் மண் வள அட்டை மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மண்ணை ஆய்வுக்கு கொடுக்கும்போது பயிர்களுக்கு ஏற்ப மண் மாதிரி சேகரித்தலை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மண் ஆய்வு கூடம் சார்பில் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இதன்படி இன்று 13ம் தேதி கோத்தகிரி நடுஹட்டி-2, ஊட்டி அருகே இத்தலார் கிராமத்திலும் நடக்கிறது. 14ம் தேதியன்று குன்னூர் அருகே அதிகரட்டியிலும், 15ம் தேதி கூடலூர் தேவாலாவிலும், 20ம் தேதி கோத்தகிரி-1, 29ம் தேதி கேத்தி-3, பாலகொலா ஆகிய கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது. அது சமயம் இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு மண் மாதிரி சேகரிப்பு வழிமுறையினை தெரிந்து கொண்டு தங்களது விளை நிலத்தின் மண்ணை ஆய்வுக்கு கொடுத்து பயனடையலாம். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் பரிந்துரைகளை பின்பற்றி பயன்பெற வேண்டும். முகாம் தொடர்பாக விளக்கங்கள் தேவைப்பட்டால் குன்னூர் விவசாயிகள் 9487966179 என்ற எண்ணிலும், ஊட்டி மற்றும் கூடலூர் விவசாயிகள் 8940022593 என்ற எண்ணிலும், கோத்தகிரி விவசாயிகள் 9787488185 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.