ஊட்டி,அக்.12: ஊட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மசினி அம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருளர் பழங்குடியின மக்களின் மேளதாளம் முழுங்க நடனமாடி மாயாரிலிருந்து சிக்கம்மனை மசினகுடிக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக மசினகுடியில் உள்ள மசினி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது நடத்தப்படும் திருவிழா நடப்பாண்டில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மசினியம்மனின் சகோதரியான மாயார் கிராமத்தில் உள்ள கிக்கம்மனை மசினகுடிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதற்காக மசினகுடி மற்றும் அதனை சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இருளர் பழங்குடியினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் மாயார் சென்று சிக்கம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய நடனமாடி அம்மனை இருளர் பழங்குடியின மக்களின் மேளதாள இசை முழங்க 10 கிமீ., தொலைவில் உள்ள மசினகுடிக்கு வனப்பகுதி வழியாக நடந்தே அழைத்து வந்தனர்.அப்போது ஏராளமானோர் பாரம்பரிய உடை அணிந்து சிக்கம்மனுக்கு முன்பு பக்தி பாடல்களை பாடி நடனமாடியவாறு அழைத்து வந்தனர். சிக்கம்மன் மசினகுடியில் உள்ள மசினியம்மன் கோயிலுக்கு வந்த நிலையில் வரும் 9 நாட்களும் மசினியம்மன் கோயிலில் மசினி அம்மன் தங்கைகளாக வணங்கப்படும் சிக்கம்மன்,தொட்டம்மன், தண்டு மாரியம்மன் மற்றும் இதர தங்கைகளுக்கும் தினசரி சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்தபட உள்ளது.


