கூடலூர், செப்.8: ஓவேலி பாலவாடி பகுதியில் சிறுத்ைத தாக்கி 3 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் ஒன்றியம் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவாடி பகுதியில் வசிப்பவர் ராஜன். இவர் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கொட்டகைக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை வேட்டையாடியுள்ளது. கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கழுத்தில் காயங்களுடன் 2 ஆடுகள் கொட்டகையின் அருகிலேயே இறந்து கிடந்தன. அதன் அருகில் சிறிது தூரத்திலேயே மற்றும் ஒரு ஆட்டை முழுமையாக சாப்பிட்ட நிலையில் அதன் எச்சங்கள் கிடந்தது. நேற்று காலை கொட்டகைக்கு சென்ற ராஜா இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆட்டை மர்ம விலங்கு கொன்று சாப்பிட்ட பாலவாடி பகுதி, தற்போது ஆட்கொல்லி புலியை தேடி வரும் பகுதியை ஒட்டி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் பாலவாடி பகுதியை ஒட்டிய கெவிபாறை பகுதியில் குடியிருப்புகளை ஒட்டிய பாறையில் புலி ஒன்று தென்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆட்டை கொன்று சாப்பிட்ட விலங்கு சம்பந்தப்பட்ட ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விலங்குகளின் கலாடி தடங்களை வைத்து சோதனை செய்ததில் ஆடுகளை கடித்தது சிறுத்தை என தெரியவந்துள்ளது. சிறுத்தைகள், கால்நடைகளை பிடித்த அதே பகுதியில் வைத்து சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாகும்.
வேட்டையாடும் மிருகங்களை அங்கிருந்து தனது இருப்பிடடத்திற்கு கொண்டு சென்று சாப்பிடுவது சிறுத்தையின் வழக்கம். ஆனால் சம்பந்தப்பட்ட ஆட்கொல்லி புலி கடந்த மாதம் 21ம் தேதி லாரஸ்டன் நம்பர் 4 பகுதியில் ரவிச்சந்திரன் என்பவரை கொன்று சாப்பிட்ட நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரை கிடைக்காமல் சுற்றித் திரியும் நிலையில் ஆட்டை கொன்று சாப்பிட்டது புலியாக இருக்கலாம் என்றும், புலி மனிதரை தாக்கிய பகுதிக்கும் பாலவாடி பகுதிக்கும் மிக குறுகிய தூரமே உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


