மஞ்சூர், ஆக.8: மஞ்சூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உலக தாய்பால் வார விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் அருண் பிரபு, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
தாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான மிகச்சிறந்த உணவாகும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி, புத்தி கூர்மை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி மேம்படுகிறது. மேலும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பிணைப்பை வலுப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது. இதில் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் அமுதா, வித்யா, சத்தியதேவி ஆகியோர் செய்திருந்தனர்.



