ஊட்டி, ஆக. 8: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் எபினேசர் கூறியிருப்பதாவது: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு www.tngasa.in மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மற்றும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதன்படி வரும் 10ம் தேதி காைல 9.30 மணியளவில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடக்கிறது. இதில், விளையாட்டு வீரர்கள் (மாவட்டம், மண்டலம் மற்றும் அதற்கு மேலான நிலையில் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்), முன்னாள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள், மாற்று திறனாளிகள், அந்தமான் நிக்கோபர், என்சிசி., மாணவர்களுக்கு நடைபெறும். இக்கலந்தாய்விற்கு தேவையான அசல் சான்றிதழ்கள் எடுத்த வர வேண்டும்.
13ம் தேதியன்று பொதுக் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையானது நடக்கிறது. சேர்க்கையின் போது ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்று சான்றிதழ், ஆன்லைன் சாதி சான்று, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, இளநிலை பட்டபடிப்பு படித்ததற்கான தொகுப்பு மதிப்பெண் பட்டியல், இம்மதிப்பெண் பட்டியல் இல்லாத பட்சத்தில் 1,2,3,4,5 மற்றும் 6ம் பருவங்களுக்கான மதிப்பெண் பட்டியல்களின் அசல், 6வது பருவ மதிப்பெண் சான்று இல்லாத பட்சத்திவ் தேர்ச்சி பெற்றதற்கான பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், மைகிரேசன் சான்று, ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தலா 6 பிரதிகள் எடுத்து வர வேண்டும்.



