Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அட்டகாச குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

குன்னூர், ஜூலை 8: குன்னூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகள் மற்றும் மலையோர கிராமங்களில் குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பல்வேறு வகையான குரங்குகள் இருந்தாலும், பரவலாகக் காணப்படும் நாட்டுக் குரங்குகளே மக்களுக்கு அதிக தொல்லையை ஏற்படுத்தி வருகின்றன. முன்பெல்லாம் காடுகளிலும், மலையோர பாதைகளிலும் மட்டுமே சுற்றித்திரிந்த குரங்குகள், தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் கூட்டமாக படையெடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, குன்னூர் டார்லிங்டன் பிரிட்ஜ் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அப்பகுதி மக்கள் தங்களின் அவதி குறித்து கூறுகையில் ‘‘வீடுகளுக்கு வெளியே துவைத்து காயபோடப்படும் துணிகளை குரங்குகள் கடித்து கிழித்து விடுகின்றன. வீட்டின் கதவு அல்லது ஜன்னல்கள் சற்று திறந்திருந்தாலும், உள்ளே புகுந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடி செல்கின்றன. தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகளிடம் குரங்குகள் சேட்டைகள் செய்து மிரட்டுவதுடன், சில பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு, குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.