குன்னூர், செப். 7: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி சார்பில் சுமார் 43.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, தற்போது மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி கடைகளை காலி செய்து, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதற்காகத் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சியின் காலியான இடங்களை தேர்வு செய்து, ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வி.பி. தெரு, கணேஷ் தியேட்டர் பகுதி மற்றும் பேருந்து நிலையத்தின் மேற்புறம் என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இந்த தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பேருந்து நிலையத்திற்கு மேற்புறம் அமைந்துள்ள முதர்மண்டிய இடத்திற்கு அருகில், சுமார் 30-க்கும் மேற்பட்ட தற்காலிக தகர கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பேருந்து நிலையக் கட்டிடத்தின் பலம் மற்றும் உறுதித் தன்மையை முறையாக ஆய்வு செய்யாமல், அதன் மேற்கூரையின் மீதே 30 கடைகள் அமைக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கணக்கீட்டின்படி, ஒரு கடைக்கு அதன் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உட்பட குறைந்தபட்சம் 1 டன் எடை கொண்டதாக இருந்தாலும், 30 கடைகளுக்கு மொத்தம் 30 டன் வரை எடை சேரும்.
நூற்றாண்டு பழமையான இந்த கட்டிடம் இந்த 30 டன் எடையைத் தாங்குமா? என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக எழுந்துள்ளது. மேலும், கட்டிடத்தின் மேல் இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலேயே, கட்டிடத்தைத் தாங்க முடியாமல் பேருந்து நிலையத்தின் சில தூண்கள் மற்றும் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்களும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பழமை வாய்ந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க பேருந்து நிலையத்தின் மேற்புறம் தற்காலிகத் தகரக் கொட்டகைகளை அமைப்பது, பேருந்து நிலையத்தின் அழகு மற்றும் தோற்றத்தையே பாழ்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளைக் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த கட்டிடம் 30 டன் கூடுதல் எடையைத் தாங்கும் வல்லமை கொண்டதா? என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு துல்லியமாக ஆய்வு செய்து, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குன்னூர் நகர பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


