ஊட்டி, செப். 7: தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் ஊட்டியில் லீக்ஸ், ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்ட சைனீஸ் ரக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளாக தாம்பட்டி, கொதுமுடி, கவரட்டி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லிமலை ஒரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பர்க், செல்லரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவ்வகை காய்கறிகள் நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. சைனீஸ் காய்கறிகளை பொறுத்த வரை குறைந்த நாட்களில் விளைச்சலை தரும் பயிராக உள்ளன.
இவற்றிற்கு குறைந்த அளவிலான தண்ணீர் இருந்தாலே போதுமானது. சைனீஸ் காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதனை கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு அனுப்புகின்றனர். இதுமட்டுமின்றி சில வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த சூழலில் நடப்பு ஆண்டு எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சைனீஸ் காய்கறி விவசாயம் பாதிப்படைந்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சராசரியாக ரூ.30 முதல் 50க்கு விற்பனையாகி வந்த ஸ்பிரிங் ஆனியன் ரூ.80க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.70 முதல் ரூ.80க்கு விற்பனையாகி வந்த லீக்ஸ் கிலோ ரூ.250க்கு விற்பனையாகி வருகிறது. லீக்ஸ் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதே விலை தான் நீடிக்கிறது.
சுகுணி காய் விலை ரூ.80க்கு விற்பனையாகி வருகிறது. புரேசில்ஸ் ஸ்பிரவ்ட் எனப்படும் கிளை கோஸ் விற்பனைக்கு மிக குறைந்த அளவே வருகிறது. இதனால் அதன் விலை ரூ.230 வரை விற்பனையாகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இனிவரும் நாட்களில் இவற்றின் விலை மேலும் உயர கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். குறைந்த தண்ணீரில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறிகளுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிரிட்டுள்ள இவற்றிற்கு தண்ணீர் இல்லாததால் அறுவடை தள்ளி போய் உள்ளது. தண்ணீர் இல்லாவிட்டால் வளர்ச்சியின்றி அவற்ைற அறுவடை கூட செய்ய முடியாது என விவசாயிகள் ெதரிவித்துள்ளனர்.


