ஊட்டி,செப்.7: ஊட்டி படகு இல்ல சாலையில் தாழ்வாக வளர்ந்துள்ள மரக்கிளைகளால் அரசு பஸ்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதில் மோதி சேதமடையும் அபாயம் நிலவுகிறது. ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் படகு இல்லப் பகுதிக்குச் செல்லும் சாலையில் எப்போதும் அரசு பேருந்துகள், சுற்றுலா வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். இந்நிலையில், படகு இல்லச்சாலையில் மேரிஸ்ஹில் சாலை சந்திப்பு அருகே ராட்சத மரங்களின் கிளைகள் போதிய பராமரிப்பின்றி சாலையின் நடுவே தாழ்வாக வளர்ந்து நிற்கின்றன.
இதனால் அவ்வழியே செல்லும் உயரமான அரசுப் பேருந்துகள், தனியார் சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் இந்த மரக்கிளைகள் உரசிச் செல்கின்றன. வாகன ஓட்டிகள் இக்கிளைகளில் மோதாமல் இருக்க திடீரென வாகனங்களை திருப்ப முயல்வதால், எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.மேலும் இரவு நேரங்களில் பார்வைத் திறன் குறைவதால் விபத்து அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது.எனவே, பெரும் விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் முன், உடனடியாகத் போக்குவரத்திற்கு இடையூறாகத் தாழ்வாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


