ஊட்டி,ஆக.7: ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் இல்லாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் அரசு தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக, தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கே அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது பூங்கா பராமரிக்கப்பட்டு மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
2ம் சீசன் அடுத்த மாதம் 1ம் தேதி துவங்கும் நிலையில், தாவரவியல் பூங்காவில் 4 லட்சம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பூங்காவில் மலர்களே இல்லை. கண்ணாடி மாளிகையில் மட்டும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பொதுவாக ஆகஸ்ட் மாதம் ரோஜா பூங்காவில் மலர்கள் காணப்படும். தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், ரோஜா பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். ஆனால், காற்றினால் பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி உதிர்ந்துவிட்டன.
இதனால், இப்பூங்காவிலும் மலர்கள் இன்றி செடிகள் மட்டுமே காட்சியளிக்கிறது. அங்குமிங்குமாக ஓரிரு செடிகளில் மலர்கள் காணப்படுகிறது. இதனால் ரோஜா பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தற்போது ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர்.




