Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை 5 மாதங்களில் 39,192 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஈரோடு, ஜூலை 6: ஈரோட்டில் இருந்து 13 கி.மீ தூரத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கு மழையால் கிடைக்கக்கூடிய நீரும், கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும் நீர் ஆதாரங்களாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள ஒரே பறவைகள் சரணாலயம் இதுதான். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பறவைகளின் வரத்து மற்றும் பாதுகாப்பு கருதி கடந்த 2000-ம் ஆண்டு இதை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது தமிழக அரசு. அதன் பிறகு அரசு நிதி ஒதுக்கி, சரணாலயத்தை மேம்படுத்த ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.

அதாவது, ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசிய நாடுகளில் நவம்பர் மாதம் பனிக்காலம் தொடங்கும் என்பதால் பறவைகளுக்கு உணவு கிடைக்காது. இதன் காரணமாக, வெளிநாட்டு பறவைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வெள்ளோடு சரணாலயத்துக்கு வருகிறது. நவம்பர் மாதம் வரத்தொடங்கும் 20-க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு 4 மாதங்கள் தங்கி இருக்கும். இவை இங்கு இனப்பெருக்கும் செய்யாது. உணவு மற்றும் உறைவிடத்துக்காக மட்டுமே இங்கு வருகிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து பறவைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிடும். மேலும் இந்திய பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் எப்போதும் காணப்படும். இவை இங்கு கூடுகட்டி இன்பெருக்கம் செய்யும்.

இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டம், மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து இயற்கையை ரசித்தபடி இங்குள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி வாழும் பறவைகளை கண்டு ஆனந்தம் அடைகின்றனர். அதன்படி, இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 10 ஆயிரத்து 720 பேரும், பிப்ரவரி மாதம் 7 ஆயிரத்து 589 பேரும், மார்ச் மாதம் 6 ஆயிரத்து 397 பேரும், ஏப்ரல் மாதம் 6 ஆயிரத்து 545 பேரும் மே மாதம் 7 ஆயிரத்து 941 பேரும் என இந்த ஆண்டு மொத்தம் 39 ஆயிரத்து 192 சுற்றுலா பயணிகள் வருகை வந்து பார்வையிட்டுள்ளதாக வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் கூறுகையில், “வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றனர்.